நான்கு மத்ஹபுகளோடும் ஷீஆ மதக் கண்டு பிடிப்பான ஜஃபரீ மத்ஹபை ஐந்தாவதாக சேர்க்கலாமா?

06.08.2024


நபித் தோழர்களின் மறைவின் பின்னால் அஹ்லுஸ்ஸுன்னா மக்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் மத்ஹபு சார்ந்த இமாம்கள்  அகீதாவில் கருத்து முரண்பாடற்றவர்களாகும் . அவர்கள் மத்தியில் கிளை மற்றும் சட்டம் சார்ந்த அம்சங்களில் கருத்து  முரண்பாடுகள் காணப்படுகின்றன. 

அவர்கள் ஹனஃபீ, மாலிகீ, ஷாஃபிஈ , ஹன்பலீ என்ற பிரசித்த பெற்ற  நான்கு மத்ஹபுகளில் ஏதாவது ஒன்றை உலகில் பின்பற்றி வாழ்கின்றனர்.

இவற்றோடு ஐந்தாவதாக 

ஜஃபர் ஸாதிக் (ரழி) பெயரில் ஷீஆ மதத்தவர் உருவாக்கிக் கொண்ட ஜஃபரீ மத்ஹபை  இணைப்பதில் என்ன தப்பு ! அது தப்பில்லைதானே என ஒரு சில அஸ்ஹர் அறிஞர்கள் கூறியுள்ளதாக ஒரு செய்தி படிக்கக் கிடைத்தது.

உண்மையில் அஹ்லுஸ்ஸுன்னா மக்கள் பின் பற்றி வருகின்ற நான்கு மத்ஹபுகளின் சட்டங்கள் :

👉அல்குர்ஆன், 

👉அஸ்ஸுன்னா,

👉நபித்தோழர்களின் தீர்ப்புக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவையும் நபித்தோழர்கள் வழிவந்தோர் வழிமுறையுமாகக் காணப்படுகின்றன.

அவற்றில் பலவீனமான செய்திகளும் ஒதுக்க வேண்டியவைகளும் சில காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மேற்படி மத்ஹபின் சட்டங்கள் யாவும் புனித குர்ஆனிய வசனங்களையும் அவர்களால் தொகுக்கப்பட்ட பல நூறு  ஹதீஸ் தொகுப்புக்களையும் ஆதாரமாகக் கொண்டவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், அவைகள் மத்தியில் காணப்படுகின்ற சட்ட முரண்பாடுகளை ஆதாரப்பூர்வமான, பலமான, ஊர்ஜிதமான, பலம் குன்றிய, ஊர்ஜிதமற்ற கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகளைக் கொண்டு தீர்வு காணப்படுவதும் முக்கிய ஒரு வழிமுறையாகும்.

ஆனால் ஷீஆ மதத்தின் சட்டங்கள்  சுன்னா முஸ்லிம்களின் ஹதீஸ் கிரந்தங்களை நம்பாத சட்ட நூல்களாகும். அவை ஏறத்தாழ வருடங்களுக்கும் மேலாக ஈராக்கின் ஸாமிர்ரா நகர குகை ஒன்றினுள் ஹிஜ்ரி 265 முதல் இன்றுவரை தலைமறைவாகி வாழ்வதாக  ஷீஆ மத அறிஞர்கள்  முடிவாக நம்பிக்கை கொள்கின்ற கற்பனை மஹ்தி என்பவர் சரிபார்த்ததாக  இன்றும் ஷீஆ மத அறிஞர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

அவர்கள்  மறைந்து வாழும் தமது இமாம் மஹ்தி வழியில் தமது மத விவகாரங்களை அணுகி இருப்பதாகவும் கூறியே தமது சட்டங்களுக்கு வலுச் சேர்ப்பதை அறிகிறோம்.

மட்டுமின்றி குலைனீ என்பவர்  எழுதிய  أصول الكافي என்ற நூலை தான் காணாத  அந்த இமாமிடம் கொடுத்து சரிபார்த்ததாகவும் அவர் சரி கண்ட பின்பே மக்கள் மன்றத்தில் அதனை விட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதனோடு சேர்த்து,

الاستبصار

التهذيب 

من لا يحضره الفقيه

ஆகிய நான்கு முக்கிய நூல்களில் இருந்து பிரதானமாகவும் மேலும் பல நூல்களில் இருந்தும் ஷீஆ மதத்தவர் சட்டங்களை எடுப்பதாகக் கூறுவதோடு சுன்னாவாசியான ஜஃபர் ஸாதிகின் கூற்றைத்தான் தாம் மத்ஹபாக பின்பற்றுவதாகக் கூறி அவர் பெயரில் பல நூறு பொய்யான செய்திகளை கட்டவிழ்த்துத்துள்ளனர். அவற்றில் பலநூறு ஆச்சரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதை அவை பற்றிய தேடல் மூலம் அறிய முடிகின்றது. அத்துடன்,  சாதாரண மாக நான்கு மத்ஹபுகளின் தொழுகை முறையை எடுத்துக் கொண்டால்  அதில் பெரிய வேறுபாடுகளைக் காண முடியாது. உடன்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன. 

ஆனால் ஷீஆ மதத்தவரின் தொழுகை முறையை பார்த்தால் அது முழுமையாக மாறுபட்டதாகக் காணலாம் .

https://www.youtube.com/watch?v=tXgtv9UxAG8

இரு தினங்களுக்கு முன்னால் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட அஷ்ஷஹீத் மர்ஹூம் இஸ்மாயீல் ஹனிய்யாவுக்கு கத்தாரில் தொழுகை நடாத்த முன்பு  ஈரானில் அதன் ஆன்மீகத் தலைவர்  காமனயீ தொழுகை நடத்திய முறையை நாம் அறிவோம். அது மாத்திரமே சாதாரண கிளை அம்சங்களில் கூட நம்மோடு ஷீஆ மதத்தவர் நிறையவே முரண்படுவதை சுட்டிக் காட்டுகின்றன .  

அடிப்படையிலும் சாதாரண சட்ட விசயங்களிலும் முரண்பட்ட வழிகெட்ட ஒரு குழுவினரை அகீதாவில் ஒன்றுபட்ட பெரும் சமூகத்தின் மத்ஹபுகளோடு எவ்வாறு இணைக்கலாம் என யோசிக்க வேண்டும்.

அரபு இஸ்லாமிய நாடுகளில் ஈரானிய சதிகள் எவ்வாறானவை என்பதை அறிய 


https://youtu.be/MWuAdppp5fs?si=nf4xzScR-ReCrfV1

மேலதிக தகவல்களை அறிய 

https://youtu.be/c8_50aF4b_M?si=Oeco41u55y_ShGxZ


எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

04/07/2024

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.