“முத்ஆ திருமணம்” ஒரு தெளிவான விபச்சாரம்
25.08.2024
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
முத்ஆ திருமணம் என்பது ஒரு தெளிவான விபச்சாரம் என்பது சாதாரண மக்களுக்கும் புரிகின்றது. எனவே, முஸ்லிம் பொதுமக்களிடம் ஷிஆயிஷத்தைப் பரப்புவதில் சிக்கல் ஏற்படுகின்றது என்பதால் ஷிஆக்கள் தமது வழக்கமான யூதப் பாணியிலான சதித் திட்டங்களில் ஈடுபடுகின்றனர். முத்ஆ திருமணம் ஏனைய திருமண முறைகளைப் போன்றதுதான் என நிலைநாட்டி தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
அதாவது, பொதுவான ஒரு திருமண முறையை அறிந்து வைத்திருக்கின்றோம். இந்த பொதுவான திருமணத்திற்கு மாற்றமான மற்றும் சில திருமண முறைகள் உள்ளன. அவற்றையும் பல இஸ்லாமிய அறிஞர்கள் சரி கண்டுள்ளனர். அது போலத்தான் முத்ஆவும் என்று கூறுகின்றனர்.
உதாரணமாக ஒரு பெண்ணின் கணவர் மரணித்து அல்லது தலாக் சொல்லிவிடுகின்றான். அந்தப் பெண்ணுக்கு தாராளமாகப் பணம் இருக்கின்றது. அவளுக்கு ஒருவரைத் திருமணம் பேசப்படுகின்றது. அவர் பொருளாதார வசதி இல்லையென்கின்றார். இப்போது இந்தப் பெண் நீங்கள் எனக்குக் கணவராக இருங்கள். ஆனால் எனக்காக எந்தப் பொருளாதாரச் செலவையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்று தனது உரிமையில் சிலதை விட்டுக் கொடுக்கின்றாள். இவ்வாறே நீங்கள் கணவன் என்ற பாதுகாப்பை மட்டும் தந்தால் போதும். எனக்கு இருப்பிடமோ, உணவோ தர வேண்டியதில்லை என்று அவள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இந்த அடிப்படையில் செய்யப்படும் திருமணம் செல்லுபடியாகும் என பல அறிஞர்களும் கூறுகின்றனர்.
இவ்வாறே ஒருவர் ஒரு பெண்ணை திருணம் முடிக்கின்றார். திருமணம் முடிக்கும் போது அவளைத் தலாக் சொல்லும் எண்ணத்துடன்தான் முடிக்கின்றார். இவ்வாறு திருமணம் செய்தாலும் அதை செல்லுபடியற்றதாக்கக் கூடிய ஷரீஆ ரீதியான காரணங்கள் இல்லையென பல அறிஞர்கள் கூறுகின்றனர். முத்ஆவும் இதைப் போன்றதுதான் என ஷிஆக்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் சரிகண்ட இந்தத் திருமணத்திற்கும் ஷிஆக்கள் கூறும் முத்ஆ எனும் விபச்சாரத்திற்கும் இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைச் சுருக்கமாக இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நினைக்கின்றேன்.
கால நிர்ணயம்: பொதுவான திருமணத்திலோ அல்லது இஸ்லாமிய அறிஞர்கள் சரிகண்ட திருமண முறையிலோ இவ்வளவு காலம் எனக் கால நிர்ணயம் இருக்காது. ஆனால் முத்ஆவில் கால நிர்ணயம் இருக்கின்றது.
“சுராரா” என்ற ஷிஆ அறிஞர் கூறுகின்றார். “ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலம் ஒரு பெண்ணுடன் முத்ஆ செய்யலாமா என்று இமாமிடம் கேட்டேன். அவர் இல்லை, ஒரு முறை அல்லது இரு முறை உறவுகொள்வதாக அல்லது ஒருநாள், இரு நாட்கள் என்ற கால நிர்ணயத்துடன் முத்ஆ இன்பம் அனுபவிக்கலாம் என்று கூறினார்” (அல்காபி:5/459)
தலாக்: ஏனைய திருமணங்கள் தலாக் மூலம் முறியும். முத்ஆ செய்யப்படும் பெண் தலாக் சொல்லப்படமாட்டாள். (அல்காபி:5/451) காலம் முடிந்ததும் உறவு தானாக முறிந்துவிடும். (இதுதானே விபச்சாரத்திலும் நடக்கின்றது.)
வலி: ஏனைய திருமணத்தில் பெண் தரப்பில் ஒரு பொறுப்பாளர் அவசியமாகும். “வலி” என்று இதற்குச் சொல்லப்படும். முத்ஆவுக்கு “வலி” அவசியமில்லை. கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவள் ஏற்றுக்கொண்டால் அவளது தந்தையின் அனுமதியின்றி முத்ஆ செய்யலாம். (முஸ்தக்குல் வஸாயில் 4/459)
எண்ணிக்கை: ஏனைய திருமணங்களுக்கு எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களுடன் மட்டுமே இல்லறம் நடத்தலாம். ஆனால் முத்ஆவுக்கு இந்த வரையறை இல்லை.
அப்துல்லாஹ் எனும் ஷிஆக்களது இமாம், “நீ அவர்களில் ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் முத்ஆ திருமணம் செய்யலாம். அவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். அவ்வளவுதான்” என்கின்றார். (அல்காபி: 5/452)
சாட்சி: ஏனைய திருமணங்களுக்கு சாட்சி அவசியமாகும். ஆனால் முத்ஆவுக்கு சாட்சி அவசியமில்லை.
“வலியோ, சாட்சியோ இல்லாமல் அவர்களை நீ (முத்ஆ) திருமணம் செய்யலாம் என அவர்களின் இமாம் அபூஅப்துல்லாஹ் கூறுகின்றார். (அல்வஸாயில்: 21/ 64)
சுக்னா, நபகா: ஏனைய திருமணத்தில் கணவன் தன் மனைவிக்கு சுக்னா எனும் தங்குமிடம், நபகா எனும் செலவு எல்லாம் கொடுக்க வேண்டும். ஆனால் முத்ஆவில் கூலி மட்டும் கொடுத்தால் போதுமானது. உறவின் போது ரூம் செலவு செய்ய வேண்டும். அதுவும் அவர்களது இடத்திற்கு நாம் சென்றுவிட்டால் அந்த செலவும் இல்லை.
நீதி: ஏனைய திருமணங்களின் போது மனைவி மக்களுக்கு மத்தியில் நீதியாக நடப்பது கடமையாகும். இதில் அது பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ……. இவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள்.
குடும்ப அமைப்பு: ஏனைய திருமணங்களில் குடும்ப அமைப்பு உருவாகும். இதில் அது இல்லை. அதானால்தான் தந்தை பெயர் தெரியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஈரானில் அதிகரித்து வருகின்றது.
மஹர்: ஏனைய திருமணங்களில் “மஹர்” எனும் திருமணக்கொடை கட்டாயமானது. இங்கே “மஹர்” அல்ல “உஜ்ர்” எனும் கூலி கொடுக்கப்படும்.
மஹர் உரிமை: ஏனைய திருமணத்தில் “மஹர்” பெண்ணுக்குரிய உரிமையாகும். ஆனால் முத்ஆவுக்கு நாள் குறித்து ஒப்பந்தம் செய்து அந்தப் பெண் சில சமயங்களில் வேறு எங்கும் போய்விட்டால் அல்லது மூன்று தினங்கள் முத்ஆ செய்வதாக ஒப்பந்தமாகி அவள் மூன்று தினங்களும் மாதத் தீட்டில் இருந்துவிட்டால் அதற்கு ஏற்ப கூலியைக் குறைத்துவிட முடியும். (காபி: 5/461)
இத்தா: கணவன் மரணித்தால் ஏனைய திருமணங்களில் மனைவி இத்தா இருக்க வேண்டும். ஆனால் முத்ஆ செய்தவருக்கு இத்தா இல்லை. (அல் வஸாயில் 21/79) அவள் பிழைப்பைப் பார்க்க வேண்டாமா?
வாரிசுரிமை: ஏனைய திருமணங்களில் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் வாரிசுரிமைக்குரியவர்களாவர். ஆனால் முத்ஆ செய்யப்பட்ட பெண் சொத்துக்கு உரிமை பெறமாட்டாள். (காபி:5/41)
மார்க்கம்: ஒரு முஸ்லிம் முஸ்லிமான அல்லது அஹ்லுல் கிதாப் பெண்ணை மட்டுமே மணக்கலாம். அவ்வாறே முஸ்லிம் பெண் முஸ்லிமான ஆணை மட்டுமே மணக்கலாம். ஆனால் “மஜூஸி” (நெருப்பு வணங்கியான) பெண்ணுடனும் முத்ஆ செய்யலாம் என்கின்றனர். (அவ்வஸாயில்: 21/38)
கணவனுடன் வாழும் பெண் திருமணம் முடிக்க முடியாது: முத்ஆவின் போது அவளுக்குக் கணவன் இருந்தாலும் அவள் இல்லையென்று சொல்லிவிட்டால் சரி.
ஒழுக்கம்: ஏனைய திருமணத்தின் போது ஒழுக்கம் பார்க்கப்படும். விபச்சாரியை மணக்க முடியாது. ஆனால் ஒரு பெண் விபச்சாரி என்பது தெரிந்தாலும் அவளை முத்ஆ என்ற பெயரில் திருமணம் முடிக்கலாம்.
(அவ்வஸாயில்: 21/29)
மனைவி எனும் பெயர்: ஏனைய திருமணம் செய்த பெண்ணுக்கு மனைவி என்ற பெயர் கிடைக்கும். அந்த உரிமை கிடைக்கும். ஆனால் முத்ஆ செய்யப்பட்ட பெண் மனைவியென்று கூறப்படமாட்டாள். அவள் கூலிக்கு அமர்த்தப்பட்டவள் என்ற பெயரைத்தான் பெறுவாள்.
இன்பம் அனுபவித்தல்: ஏனைய திருமணத்தில் கணவன் பூரண இன்பம் அனுபவிக்க உரிமை பெற்றுள்ளான். ஆனால், முத்ஆவின் போது ஒரு பெண் நான் முத்ஆவுக்கு சம்மதிக்கின்றேன். ஆனால் உடலுறவு கொள்ளக் கூடாது. மற்றைய எல்லாம் செய்யலாம் என நிபந்தனையிட்டால் அவன் உடலுறவைத் தவிற மற்றைய அனைத்தையும் செய்து கொள்ளலாம் என அபூ அப்துல்லாஹ் எனும் இமாம் கூறுகின்றார். (காபி: 5/467)
இது அல்லாமல் இஸ்லாமிய திருமண முறையில் வரும் “ழிஹார்”, “லிஆன்” போன்ற பல சட்டங்களில் முத்ஆ மாறுபட்டதாகும். எனவே, ஷிஆக்களின் இந்த வழிகேட்டை நியாயப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சி நியாயமற்றதாகும். இஸ்லாமிய அறிஞர்கள் அங்கீகரித்த திருமண முறைக்கும் “முத்ஆ” விபச்சாரத்துக்குமிடையில் நிறையவே வேறுபாடு உள்ளது. எனவே, ஷிஆக்களின் போலிப் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் எனப் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.