அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் நேற்று நடத்தப்பட்ட மாநாட்டின் தீர்மானங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த சில காலமாக அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தினரின் தூய அகீதாவுக்கெதிரான பல சிந்தனைகள் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் பரவி வருவதை அவதானித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகளை பறைசாற்றும் முகமாகவும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகளை வெளிச்சமிட்டுக் காட்டி அவை பிழையானவை வழிகேடானவை, அபத்தனமானவை என்பதை விளக்கும் முகமாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நேற்று 2015.05.20 ஆம் திகதி ஏற்பாடு செய்த முழு நாள் தேசிய மாநாட்டில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொண்ட உலமாக்கள், அரபுக் கலாசாலை அதிபர்கள், விரிவுரையாளர்கள், மஸ்ஜித் இமாம்கள், கதீப்மார்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் இடம்பெற்ற விரிவுரைகள், ஆய்வுகள், கருத்துரைகள் முதலானவற்றை ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:
1) எல்லாம் அவனே எனும் 'வஹ்ததுல் வுஜூத்' சிந்தனையும் அல்லாஹுத் தஆலா தனது படைப்பினங்களில் இறங்கி அவன் அவற்றில் ஒன்றித்து விட்டான் என்ற சிந்தனையும் தூய இஸ்லாமிய சிந்தனைக்கு முற்றிலும் முரணான, குப்ரை ஏற்படுத்தும் சிந்தனைகளாகும் என்பதையும், அல்லாஹுத் தஆலா ஒருவனாகவும் வணக்கத்துக்கு தகுதியான ஒரே இறைவனாகவும் சகல படைப்பினங்களினதும் படைப்பாளனாகவும் இருப்பது போலவே அவன் வேறானவனாகவும் அவனால் படைக்கப்பட்ட சிருஷ்டிகள் வேறானவையாகவும் இருப்பதை நம்புவது அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தின் அகீதாவின் ஓர் அடிப்படைக் கொள்கையாகும் என்பதை மாநாடு மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றது.
2) முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபிமார்களில் இறுதியானவர்கள். அவர்களுக்குப் பின் இறுதி நாள் வரை எந்தவொரு நபியும் வர முடியாது என்பதும், அவர்களுக்குப் பின்னர் நபித்துவத்தை வாதாடக் கூடிய உரிமை வேறு எவருக்கும் இல்லை என்பதும், அவர்கள் கொண்டுவந்த மார்க்கமே இறுதி மார்க்கம் என்பதும், நபிமார்கள் மாத்திரமே தவறுகளில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் அல்லாத வேறு எவரும் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்ல என்பதும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும்.
இதற்கு மாற்றமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பிறகு நபிமார்களின் வருகை தொடரும் என்று கூறுவோரின் சிந்தனை இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானதாகும். அவ்வாறே இஸ்னா அஷரிய்யா என அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒரு பிரிவினரால் முன்வைக்கப்படும் மிகப் பிரதான கொள்கையான 'தமது பன்னிரெண்டு இமாம்களும் மறதி, தவறு மற்றும் பாவங்கள் அனைத்திலிருந்தும் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற கொள்கையும் முற்றிலும் வழிகேடான கொள்கையாகும் என்பதையும் இம்மாநாடு தெளிவுபடுத்த விரும்புகின்றது.
3) ஸுன்னா இஸ்லாத்தின் இரண்டாவது பெரும் மூலாதாரமாகும். அது அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாகவும் விளங்குகின்றது. இந்த வகையில் அல்குர்ஆன் மாத்திரமே இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம்ளூ ஸுன்னா ஒரு சட்ட மூலாதாரமல்ல என்ற வாதம் வழிகேடானதும் அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரணானதுமாகும் என்பதை இம்மாநாடு விளக்க விரும்புகின்றது.
4) ஸஹாபாக்கள் என்போர் ஈமான் கொண்ட நிலையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை சந்தித்து அதே நிலையில் மரணித்தவர்களாவர். ஸஹாபாக்கள் அனைவரும் நேர்மையானவர்கள்ளூ இஸ்லாத்தின் எழுச்சிக்காக அர்ப்பணத்துடன் போராடியவர்கள்ளூ தியாகங்கள் செய்தவர்கள்ளூ அத்தகைய நபித் தோழர்களை குறை சொல்வது, விமர்சிப்பது அல்லது தூற்றுவது குர்ஆனையும் ஸுன்னாவையும் குறை சொல்வதாகவே அமையும் என்பதையும்; ஸஹாபாக்களை நேசிப்பது ஈமானின் தெளிவான அடையாளங்களில் ஒன்றாகும் என்பதையும் இம்மாநாடு பகிரங்கப்படுத்துகின்றது.
சஹாபாக்களை நிராகரிப்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும் என்பதையும் குறிப்பாக, அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு), உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு), அலி (ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய நால்வரும் முறையே ஏனைய அனைத்து சஹாபக்களை விடவும் உயர்ந்தவர்கள் என்பதையும்; அந்த முறையிலேயே இஸ்லாமிய கிலாபத் அமைந்தது என்பதையும் நம்புவது அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தின் அடிப்படையான அகீதா சார்ந்த அம்சமாகும் என்ற உண்மையை இந்த மாநாடு தெளிவுபடுத்துகின்றது.
மேலும் தம்மை ஷீஆக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரிவினர் ஸஹாபாக்கள் மீது குறிப்பாக அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு), உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) உட்பட அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு), அன்னை ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) முதலானோர் மீது முன்வைக்கும் அனைத்து விமர்சனங்களும் வீண் அபாண்டங்களும் கட்டுக்கதைகளுமாகும் என்றும் இவற்றை நம்புவது தூய இஸ்லாமிய அகீதாவுக்கு மாசுகற்பிக்கக் கூடியது என்பதையும் இந்தமாநாடு எடுத்துரைக்கின்றது.
5) உலகில் வாழும் ஷீஆக்களுடைய நம்பிக்கைகளான இமாமத், கிலாபத் இஸ்மத், தகிய்யா சார்ந்த நம்பிக்கைகள் அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தின் நம்பிக்கைக்கு முரணானவை என்பதையும் அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த மாநாடு பகிரங்கப்படுத்த விரும்புகின்றது.
6) இலங்கை முஸ்லிம் சமூகம் அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத் சார்ந்த சமூகமாகும். இந்த வகையில் அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தின்; தூய அகீதாவை தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கின்ற கடப்பாடு உலமாக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும், துறைசார்ந்த நிபுணர்களுக்கும் உண்டு என்பதை இந்த மாநாடு தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றது.
7) அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் சில அபிப்பிராய பேதங்கள், கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும் அவர்கள் தமக்கு மத்தியில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, முரண்பாண்டில் உடன்பாடு காண வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்திச் சொல்ல விரும்புகின்றது.
8) எமது நாடு ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு என்ற வகையில் மத ரீதியான, இன ரீதியான பாகுபாடுகள் இருந்தபோதிலும் மனிதர்கள் என்ற வகையில் அனைவருடனும் ஐக்கியமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ வேண்டுமென்பதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
9) மாற்றுக் கருத்துடையோருடன் நாம் முரண்பட்டபோதிலும் அவர்களுடன் மிகவும் பண்பாடாகவும் அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத் அகீதாவுக்கு முரணான சிந்தனைப் பிரிவுகளை நாம் நிராகரித்த போதிலும் அவர்களுக்கு அறிவூட்டி, தெளிவான தூய இஸ்லாமிய சிந்தனையை அவர்களுக்கு வழங்குகின்ற கடப்பாடு எமக்கிருக்கின்றது என்பதையும் கலந்துரையாடலுக்கூடாகவும் தேவை ஏற்படின் விவாதங்களுக்கூடாகவும் உண்மையை தரிசிப்பதற்கான வாய்ப்பை வழிகெட்ட சிந்தனைகளைக் கொண்டவர்களுக்கு வழங்குகின்ற தார்மீகக் கடப்பாடு நமக்கு உண்டு என்பதையும் இந்த மாநாடு பிரகடனம் செய்கின்றது.
10) மேற்குறிப்பிட்ட விடயங்களில் தெரிந்தோ தெரியாமலோ அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு முரண்பட்டிருக்கும் அனைத்துப் பிரிவினரிடமும், தனி நபர்களிடமும் வழிகெட்ட தமது அனைத்துக் கொள்கைகளிலிருந்தும் சுயவிருப்பத்துடன் தவ்பா செய்து அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்துடன் இணைந்து விமோசனம் அடைந்து கொள்ளுமாறும் இந்த மாநாடு வேண்டிக் கொள்கின்றது.
11) இலங்கைவாழ் அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஅத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வழிகெட்ட சிந்தனைப் பிரவுகள் விடயத்தில் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அத்தகைய சிந்தனையுடையவர்கள் தங்களை அணுகும்போது உலமாக்களை அணுகி அந்த வழிகெட்ட சிந்தனைகள் தொடர்பான தெளிவைப் பெற்று தமது அகீதாவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும் இந்த மாநாடு இலங்கைவாழ் முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கின்றது.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.